Monday, September 27, 2004

 

தோல் வியாதிகள் அனைத்தும் விட்டோட..

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!

சொரி, படை, மேகம், அம்மை போன்ற தோல் சம்பந்தப்பட்ட
வியாதிகள் அனைத்தும் விட்டோட..




காஞ்சியில் விழியொளி பெற்று ஆரூர் நோக்கி நடக்கும் சுந்தரரை
மற்றொரு சோதனை சூழ்கிறது. அவர் உடலெங்கும் ஒருவகை
சருமநோய் ஏற்பட்டுத் தாளாத வேதனையில் ஆழ்கிறார் சுந்தரர்.
ஆயினும் விடாமல் ஆருரானைத் தரிசிக்கும் ஆவலில் பைய நடப்பவர்
திருத்துருத்தியை வந்தடைகிறார். இங்கு நடந்த அதிசயத்தை
சேக்கிழார் பெருமான்தம் திருவாக்கால் காண்போம்.

திருப்பதிகங் கொடுபரவிப் பணிந்துதிரு அருளாற்போய்
விருப்பினொடுந் திருத்துருத்தி தனைமேவி விமலர்கழல்
அருத்தியினாற் புக்கிறைஞ்சி 'அடியேன்மேல் உற்றபிணி
வருத்தம் எனை ஒழித்தருள வேண்டும்' என வணங்குவார்;

பரவியே பணிந்தவர்க்குப் பரமர்திரு அருள்புரிவார்
விரவியஇப் பிணிஅடையத் தவிர்ப்பதற்கு வேறாக
வரமலர்வண் டறைதீர்த்த வடகுளத்துக் குளி என்னக்
கரவில்திருத் தொண்டர்தாங் கைதொழுது புறப்பட்டார்;

மிக்கபுனல் தீர்த்தத்தின் முன்அணைந்து வேதமெலாம்
தொக்கவடி வாயிருந்த துருத்தியார் தமைத்தொழுது
புக்கதனில் மூழ்குதலும் புதியபிணி அதுநீங்கி
அக்கணமே மணியொளிசேர் திருமேனி ஆயினார்.

கண்டவர்கள் அதிசயிப்பக் கரையேறி உடைபுனைந்து
மண்டுபெருங் காதலினாற் கோயிலினை வந்தடைந்து
தொண்டர்எதிர் 'மின்னுமா மேகம்' எனுஞ் சொற்பதிகம்
எண்டிசையும் அறிந்துய்ய ஏழிசையால் எடுத்திசைத்தார்.

திருத்துருத்தியில் உறை அம்மையப்பன் அருள்வாக்கால் திருக்குளத்தில்
குளித்தெழுந்தவுடன் அவரைச் சூழ்ந்திருந்த சருமநோய் அகன்று
மின்னும் பொன்மேனி மீண்டும் பெற்றார் சுந்தரர். கண்டவர்
அதிசயித்து நிற்க அருட்பதிகம் ஒன்று எழுந்ததங்கே:

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி
வெடிபடக் கரையொடுந் திரைகொணந் தெற்றும்
அன்னமாங் காவிரி அகன்கரை யுறைவார்
அடியினை தொழுதெழும் அன்பராம் அடியார்
சொன்ன வாறறிவார் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை
என்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத் தானை - 1

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங்
கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறி
மாடுமா கோங்கமே மருதமே பொருது
மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்தி
ஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப்
பழவினை யுள்ளன பற்றறுத் தானை - 2

கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார்
கொழுங்கனிச் செழும்பயன் கொண்டு கூட்டெய்திப்
புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும்
போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்
செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத்
தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை - 3

பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொழிந்திழுந் தருவிகள் புன்புலங் கவரக்
கறியுமா மிளகொடு கதலியும் உந்திக்
கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்
எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை
அருவினை யுள்ளன ஆசறுத் தானை - 4

பொழிந்திழி மும்மதக் களிற்றின் மருப்பும்
பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்தி
இழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி
எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கே
சுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை
உற்றநோய் இற்றையே உறவொழித் தானை - 5

புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும்
பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்தி
அகழுமா அருங்கரை வளம்படப் பெருகி
ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்
திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை
இழிந்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை - 6

வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும்
வருடியும் வணக்கியும் மராமரம் பொருதும்
கரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்
விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை
உலகறி பழவினை அறவொழித் தானை - 7

ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப்
புள்ளினம் பலபடிந் தொன்கரை உகளக்
காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க்
கவரிமா மயிர்சுமந்து ஒண்பளிங் கிடறித்
தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை
அம்மை நோய் இம்மையே ஆசறுத் தானை - 8

புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப்
பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்ப
இலங்குமா முத்தினோ டினமணியிடறி
இருகரைப் பெருமரம் பீழ்ந்து கொண் டெற்றிக்
கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்
விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை
மேலைநோய் இம்மையே விடுவித் தானை - 9

மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி
மாறலாம் திரிபுரம் நீறெழச் செற்ற
அங்கையான் கழலடி அன்றி மற்றறியான்
அடியவர்க் கடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக்
குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்
தங்கையால் தொழுது தம்நாவின் மேற்கொள்வார்
தவநெறி சென்று அமர் உலகம் ஆள்பவரே - 10

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்


Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?