Saturday, October 02, 2004

 

மக்கட்பேறு வேண்டி இரு பதிகங்கள்

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க!



மக்கட்பேறு வேண்டி இரு பதிகங்கள்
ஞானசம்பந்தப் பெருமான் தம் இறுதிச் சுற்றாய் தொண்டமண்டலத் தலங்களைத்
தரிசித்து வருகையில் காஞ்சிக்குப் பக்கம் திருவோத்தூரில் நிகழ்த்திய
அற்புதமிது.

அத்தலத்தில் ஆண்பனையொன்றிருந்தது. அவ்வூரைச் சேர்ந்த சைவர் ஒருவரை
பெரும்பான்மைச் சமணர்கள் அப்பனையைக் காட்டி எள்ளுவது வழக்கம்.
சிவபெருமானின் திருவருளால் அம்மரத்தைக் காய்க்க வைப்பதுதானே என்று
அவர்கள் நகைத்திருப்பதை ஞானசம்பந்தப் பெருமானிடம் சொல்லி அழுகிறார்
அவ்வடியார்.

ஆளுடைப் பிள்ளையார் உடனொரு பதிகம் பாட அம்மரம் பெண்பனையாகிக்
காய்ப்பதாய்த் திருமுறை சொல்கிறது.

சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்:

"விரும்பு மேன்மைத் திருக்கடைக்காப் பதனில் விமலர் அருளாலே
குரும்பை ஆண்ப னைஈனும் என்னும் வாய்மை குலவுதலால்
நெருங்கும் ஏற்றுப் பனையெல்லாம் நிறைந்த குலைக ளாய்க்குரும்பை
அரும்பு பெண்ணை யாகிடக் கண்டோ ரெல்லாம் அதிசயித்தார்.

சீரின் மன்னுந் திருக்கடைக்காப் பேற்றிச் சிவனார் அருள்பெற்றுப்
பாரில் நீடும் ஆண்பனைமுன் காய்த்துப் பழுக்கும் பண்பினால்
நேரும் அன்பர் தங்கருத்து நேரே முடித்துக் கொடுத்தருளி
ஆரும் உவகைத் திருத்தொண்டர் போற்ற அங்கண் இனிதமர்ந்தார்

தென்னாட் டமண்மா சறுத்தார்தஞ் செய்கை கண்டு திகைத்தமணர்
அந்நாட் டதனை விட்டகல்வார் சிலர்தங் கையிற் குண்டிகைகள்
என்னா வனமற் றிவைஎன்று தகர்ப்பார்; இறைவன் ஏறுயர்த்த
பொன்னார் மேனிப் புரிசடையான் அன்றே என்று போற்றினார்."

'குரும்பை ஆண்பனை ஈன்குலை ஓத்தூர்' என்று பாடிமுடிக்கையில்
அம்மரம் காய்த்துக் குலுங்கியதாய்ப் பாடுகிறார் சேக்கிழார் பெருமான்.

ஞானசம்பந்தப் பெருமானை முருகனாகவே வணங்கி பல
தலங்களில் அவர் நிகழ்த்திய அதிசயங்களையும் முருகனின்
திருவருளாகவே பல தருணங்களில் பாடும் அருணகிரியார்
இந்த அதிசயத்தையும் திருப்புகழில் பதிவு செய்துள்ளார்:

"பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
பழமாய்ப் பார் மிசை வீழும் - படிவேதம்
படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
பறிகோப் பாளிகள் யாருங் கழுவேறச்
சிவமாய்த் தேனமு தூறுந்திருவாக் காலொளிசேர்வெண்
டிருநீற் றாலம ராடுஞ்
செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே!"

'சுருதிவழிமொழி சிவகலை அலதினி உலக கலைகளும் அலம் அலம்'
என்றிருந்தவர் அதனை நிறுவ வந்த ஞானக்குழந்தை முருகனே என்று
பாடுவதும் பொருத்தமே.

முழுப்பதிகமும் கீழே:

பூத்தேர்ந்து ஆயன கொண்டு நின் பொன் அடி
ஏத்தாதார் இல்லை எண்ணுங்கால்
ஓத்தூர் மேய ஒளி மழுவாள் அங்கைக்
கூத்தீர் உம்ம குணங்களே. 1

இடைஈர் போகா இளமுலையாளை ஓர்
புடையீரே புள்ளிமான் உரி
உடையீரே உம்மை ஏத்துதும் ஒத்தூர்ச்
சடையீரே உமதாளே. 2

உள்வேர் போல நொடிமையினார் திறம்
கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்
ஒள் வாழைக்கனி தேன் சொரி ஒத்தூர்க்
கள்வீரே உம காதலே. 3

தோட்டீரே துத்தி ஐந்தலை நாகத்தை
ஆட்டீரே அடியார் வினை
ஓட்டீரே உம்மை ஏத்துதும் ஓத்தூர்
நாட்டீரே அருள் நல்குமே. 4

குழை ஆர் காதீர் கொடுமழுவாள் படை
உழை ள்வீர் திருஓத்தூர்
பிழையா வண்ணங்கள் பாடி நின்று டுவார்
அழையாமே அருள் நல்குமே. 5

மிக்கார் வந்து விரும்பிப்பலி இடத்
தக்கார் தம் மக்களீர் என்று
உட்காதார் உளரோ திருஓத்தூர்
நக்கீரே அருள் நல்குமே. 6

தாது ஆர் கொன்றை தயங்கும் முடி உடை
நாதா என்று நலம் புகழ்ந்து
ஓதாதார் உளரோ திருஓத்தூர்
ஆதீரே அருள் நல்குமே. 7

என்தான் இம்மலை என்ற அரக்கனை
வென்றார் போலும் விரலினால்
ஒன்றார் மும்மதில் எய்தவன் ஓத்தூர்
என்றார் மேல்வினை ஏகுமே. 8

நன்றா நால்மறையானொடு மாலும்ஆய்ச்
சென்றார் போலும் திசைஎலாம்
ஒன்றாய் உள்எரிஆய் மிக ஓத்தூர்
நின்றீரே உமை நேடியே. 9

கார்அமண் கலிங்கத் துவர் ஆடையர்
தேரர் சொல் அவை தேறன்மின்
ஓர் அம்பால் எயில் எய்தவன் ஓத்தூர்ச்
சீரவன் கழல் சேர்மினே. 10

குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
அரும்பு கொன்றை அடிகளை
பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
விரும்புவார் வினை வீடே. 11

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

தாணுவாய் நிற்பது தளிர்ப்பதும் சக்திசிவக்கூத்தே!

>>>>>

நமசிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க!

சிவஞானபோதம் பெற்றருளிய மெய்கண்டதேவரின் திருஅவதாரம்
நிகழ்வதற்கு ஏதுவாய் அமைந்த பதிகமிது.

'மலர்தலை உலகின் மாயிருள் துமியப்
பலர்புகழ் ஞாயிறு படரின் அல்லதைக்
காண்டல் செல்லாக் கண்போல் ஈண்டிய
பெரும்பெயர்க் கடவுளிற் கண்டுகண் இருள்தீர்ந்து
அருந்துயர்க் குரம்பையின் ஆன்மா நாடி
மயர்வுஅற நந்தி முனிகணத்து அளித்த
உயர்சிவ ஞான போதம் உரைத்தோன்
பெண்ணைப் புனல்சூழ் வெண்ணெய்ச் சுவேதவனன்
பொய்கண்டு அகன்ற மெய்கண்ட தேவன்
பவநனி வன்பகை கடந்த
தவரடி புனைந்த தலைமை யோனே'

- என்று சிவஞானபோதத்தின் பாயிரத்தில் அறிமுகப்படுத்துவது போல்
பெண்ணைநதிக்கரை திருவெண்ணெய்நல்லூரில் பிறந்தவர் அவர்.
சுவேதவனன் (தமிழில் திருவெண்காடன்) என்பது அவர்
பெற்றோரிட்ட பெயர்.

குழந்தை வேண்டித் தவமிருந்த திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த
அச்சுதகளப்பாளர் தம்பதியர் திருவெண்காட்டில் பிரமவித்யாநாயகி
சமேத ஸ்வேதாரண்யேஸ்வரரை வணங்கிப் பின்னர் திருமுறையில்
நூல்சார்த்திப் பார்த்ததில் ஞானசம்பந்தப் பெருமான் அத்தலத்தில்
நல்கிய இப்பதிகம் வரப் பெற்றதாகவும், முக்குளத்தில் குளித்து இதனை
ஒரு மண்டலம் ஓதியே பிள்ளைப்பேறு பெற்றதாகவும் சொல்வர்.

சகலாகமப் பண்டிதரான அருணந்தி சிவாச்சாரியார் அவர்களே
இப்பதிகத்தை எடுத்துக் கொடுத்ததாகவும் பின்னாளில் அவரே
மெய்கண்டதேவருக்குச் சீடருமானதாகவும் சொல்வர்.

மும்மலங்களின் தன்மையினைக் குறித்துத் தம் மாணாக்கருக்கு
விளக்கம் அளிக்கையில்,
'ஆணவமலத்தின் தன்மையை அறிவது எங்ஙனம்?' என்று பின்னிருந்து
அருணந்தியார் வினா எழுப்பியதாகவும், அதற்கு மெய்கண்டதேவர்
'தங்களைக் கொண்டே' என்று விடையளித்தாகவும், அதைக் கேட்டு
அகந்தை கரைந்து மெய்கண்டாருக்கே சீடரானதாகவும் கதையுண்டு.

முழுப்பதிகமும் கீழே:

கண்காட்டும் நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே. 1

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ள நினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர் தம்மைத் தோயாவாம் தீவினையே. 2

மண்ணொடு நீர் அனல் காலோடு ஆகாயம் மதியிரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமும் எண்திசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடு இடமா விரும்பினனே. 3

விடமுண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டும் காட்சியதே. 4

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்தன்
மேல்அடர் வெங்காலன் உயிர் விண்டபினை நமன்தூதர்
ஆலமிடற்றான் அடியார் என்றடர அஞ்சுவரே. 5

தண்மதியும் வெய்யரவும் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதல் உமை ஓர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே. 6

சக்கரம் மாற்கு ஈந்தானும் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமேல் அசைத்தானும் அடைந்த அயிராவதம் பணிய
மிக்கு அதனுக்கருள் சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளம் நன்கு உடையானும் முக்கண் உடை இறையவனே. 7

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்து அன்று அருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்க
விண்மொய்த்த பொழில் வரிவண் டிசைமுரலும் வெண்காடே. 8

கள்ளார் செங்கமலத்தான் கடல்கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கு ஓடி உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்று
உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே. 9

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டு மொழி பொருள் என்றும்
பேதையர்கள் அவர்பிரிமின் அறிவுடையீர் இதுகேண்மின்
வேதியர்கள் விரும்பிய சீர் வியன் திருவெண் காட்டான் என்று
ஓதியவர் யாதுமொரு தீதிலரென்று உணருமினே. 10

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
விண்பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்
பண்பொலி செந்தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான்பொலியப் புகுவாரே. 11

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

இப்பதிகத்தின் இரண்டாம் பாடலில் ' பிள்ளையினோடு உள்ள
நினைவு ஆயினவே வரம்பெறுவர், ஐயுறவேண்டா!'
(பிள்ளைவரத்தொடு அவரவர் எண்ணிய எல்லா வரங்களையும் பெறுவர்) என்பது
ஆளுடைப்பிள்ளையின் கட்டளை வாக்கியம்!


Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?