Tuesday, September 28, 2004

 

விழியொளி பெற வேண்டிப் பாடும் பதிகம்

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க!




விழியொளி பெற வேண்டிப் பாடும் பதிகம்

வன்றொண்டர் சுந்தரர் சாரூப முக்தியெனும் சஹமார்க்கத்தைச் சுட்ட வந்த
திருஅவதாரம். மீண்டுவாரா சன்மார்க்கமெனும் பரமுக்திக்கு முந்தைய
சஹமார்க்கத்தில் யோகமும் உண்டு; போகமும் உண்டு. போகத்தின் உச்சத்தையும்
உணர்த்தும் பொருட்டு அவருடன்
கயிலையிலிருந்து இறங்கி வந்தவரே அவர்தம் துணைவியரான பரவையாரும்,
சங்கிலியாரும்.

தம்பிரான் தோழரென்று வழங்கப் பட்டாலும் இந்த இரண்டு பெண்டிரிடை
அலைக்கழித்து இறுதியில், 'வாழ்வாவது மாயம், இது மண்ணாவது திண்ணம்,
பாழ்போவது பிறவிக்கடல்' (78-1) என்று அவரை நிலையா உலகவாழ்வை
உணர்த்தி ஆட்கொள்ளும்வரை இறைவன் அவருக்கு வைத்த சோதனைகள் பல.

அதில் ஒரு சோதனையைப் பார்ப்போம்.

திருவொற்றியூரில் சங்கிலியாரைப் பிரிந்து போகேன் என்று
திருமுன்னிலையில் சத்தியம் செய்து கொடுத்த சில நாள்களிலேயே ஆரூருக்குத்
திரும்பும் அவா வந்து விட்டது சுந்தரருக்கு. சங்கிலியாருக்குக் கொடுத்த
வாக்கை மீறி ஊரெல்லையைக் கடந்தவுடன் அவருக்குப் பார்வை பறிபோய்
விட்டது.

அழுது புலம்பிய வண்ணம் வடதிருமுல்லைவாயில் பதி தொழுது வன்பாக்கத்தில்
இறையருளால் ஊன்றுகோல் பெற்று, ஆலங்காடு
வழியே காமக்கோட்டத்து (காஞ்சி மாநகர்) கச்சி ஏகம்பனைச்
சென்றடைகிறார். கண்பார்வை மீண்டும் பெறவேண்டி
அத்தலத்தில் எழுந்ததே இப்பதிகம்:

ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
ஆதியை அமரர் தொழுதேத்தும்
சீலந்தான் பெரிதும் உடையானைச்
சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏலவார் குழலாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
காலகாலனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 1

உற்றவர்க்குதவும் பெருமானை
ஊர்வதொன்றுடையான் உம்பர் கோனைப்
பற்றினார்க் கென்றும் பற்றவன் தன்னைப்
பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை
அற்றமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கற்றைவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக்கண் அடியேன் பெற்றவாறே. - 2

திரியும் முப்புரந் தீப்பிழம்பாகச்
செங்கண் மால்விடை மேல் திகழ்வானைக்
கரியின் ஈருரி போர்த்துகந்தானைக்
காமனைக் கனலா விழித்தானை
வரிகொள் வெள்வளையாள் உமை நங்கை
மருவி ஏத்தி வழிபடப் பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 3

குண்டலம் திகழ் காதுடையானைக்
கூற்றுதைத்த கொடுந்தொழிலானை
வண்டலம்பு மலர்க் கொன்றையினானை
வாளராமதி சேர் சடையானை
கெண்டையந் தடங்கண் உமை நங்கை
கெழுமியேத்தி வழிபடப் பெற்ற
கண்டம் நஞ்சுடைக் கம்பனெம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 4

வெல்லும் வெண்மழு ஒன்றுடையானை
வேலை நஞ்சுண்ட வித்தகன் தன்னை
அல்லல் தீர்த்தருள் செய்ய வல்லானை
அருமறையவை அங்கம் வல்லானை
எல்லையில் புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 5

திங்கள் தங்கிய சடையுடையானைத்
தேவதேவனைச் செழுங்கடல் வளரும்
சங்க வெண்குழைக் காதுடையானைச்
சாம வேதம் பெரிதுகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு
மருவியேத்தி வழிபடப் பெற்ற
கங்கையாளனைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 6

விண்ணவர் தொழுதேத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓதவல்லானை
நண்ணினார்க் கென்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 7

சிந்தித்தென்றும் நினைந்தெழுவார்கள்
சிந்தையில் திகழும் சிவன் தன்னை
பந்தித்த வினைப் பற்றறுப்பானைப்
பாலொடானஞ்சும் ஆட்டுகந்தானை
அந்தமில் புகழாள் உமை நங்கை
ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்தவார் சடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 8

வரங்கள் பெற்றுழல் வாளரக்கர் தம்
வாலியபுரம் மூன்றெரித்தானை
நிரம்பிய தக்கன் தன்பெரு வேள்வி
நிரந்தரஞ் செய்த நிட்கண்டகனைப்
பரந்த தொல்புகழாள் உமைநங்கை
பரவி ஏத்தி வழிபடப் பெற்ற
கரங்கள் எட்டுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 9

எள்கல் இன்றி இமையவர் கோனை
ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத் துள்கி உகந்துமை நங்கை
வழிபடச் சென்று நின்றவா கண்டு
வெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி
வெருவி ஓடித் தழுவ வெளிப்பட்ட
கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே. - 10

பெற்றம் ஏறுகந்து ஏற வல்லானைப்
பெரிய எம்பெருமான் என்றெப்போதும்
கற்றவர் பரவப் படுவானைக்
காணக் கண் அடியேன் பெற்றதென்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானைக்
குளிர்பொழில் திருநாவல் ஆரூரன்
நற்றமிழ் இவை ஈரைந்தும் வல்லர்
நன்னெறி உலகெய்துவர் தாமே. - 11

அருட்பதிகம் இதைப்பாட திருவருளால் இடதுகண்ணில் பார்வை
பெறுகிறார் சுந்தரர். காஞ்சி காமக்கண்ணியார் ஆளும் தலமல்லவா? அவள் ஆளும்
இடப்புறத்தில் அவளருளால் முதலில்
ஒளிபெற வலதுகண்ணிலும் பார்வை திரும்புவது
ஆருர் சென்றடைந்தபின்.

கண்பார்வைக்குறை கொண்ட அன்பரெல்லாம் இந்தப் பதிகத்தை நாளும் ஓதி நலம்
பெறலாம்.

திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்


Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?