Tuesday, February 24, 2004

 

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!

நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!


'கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என்று தொடங்கும் இந்தப்பதிகம் தமிழகவரலாற்றில் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கே 'விலக்ககிலீர்!'என்று அப்பர்பெருமான் இறைவனிடம் வேண்டுவது அவருக்காக மட்டுமல்ல என்றேகொள்ள வேண்டும். கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுக்காலம் களப்பிரர் எனும்இறைமறுப்புக் கூட்டத்தின் பிடியில் சிக்கித் தவித்திருந்த தமிழகமே, இந்தப்பதிகம் எழுந்த தருணத்தில் மீண்டதைச் சுட்டும் வண்ணம், இறையருளால் இந்தச்சொற்கள் எழுந்ததாய்க் கொள்ள வேண்டும்.


சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் பைய மேலேறும் ஆகமமார்க்கங்களில் சரியை என்பது இறையை நோக்கி எடுத்து வைக்கும் முதல்படி.ஆன்மிகத்தில் இந்த முதல்படியை எடுத்து வைப்பதே கடினம் என்பதை அன்பர்அறிவர். எப்போதும் புறம்நோக்கியே செல்லும் சிந்தையை அகம்நோக்கிஅறவழியில் திருப்புவது அரிதாய்ப் பெறும் பேறு.


அப்பர்பெருமான் சரியை மார்க்கத்தை நிறுவ வந்தவர்.
பதிகம் எழுந்த வரலாற்றைக் காணுமுன், இந்த மார்க்கங்களைப் பற்றியும் சற்றேவிரிவாய்க் காண்போம்.


சாலோகம், சாமீப்யம், சாரூபம் என்பவை இட்டுச் செல்லும் 'பதமுக்தி'கடந்த,சாயுஜ்யம் என்ற 'பரமுக்தி'க்கும் அடிப்படை யாதெனில் 'யான் எனது' என்றநிலை கடத்தலே.


சாயுச்சிய நிலையே துறவறமாவது.
அதென்ன பதமுக்தி மற்றும் பரமுக்தி?


பிறந்திறந்தோய்ந்திருக்கும் உயிர்களின் மேல் கருணைகொண்டு அவற்றைத் தன்திருவடியுடன் ஒன்றாக்கிக் கொள்வது அறக்கருணையெனில், விட்டுவிலகிவீடுபேறு மட்டுமே குறியெனக் கொள்ளாமல் மற்றீண்டு வரும் உயிர்களின் மேல்கொள்வதுஇறைவனின் மறக்கருணை என்பர்.
சில உயிர்கள் சிலகாலம் திருவடிபேற்றில் திளைத்தும் தத்தம் வினைப்புசிப்பின்படி மீண்டும் வரும். மீண்டுவாரா முக்தி பரமுக்தியெனில், அவசியம் வருகையில் அப்படி மீண்டும் வரும் நிலைக்கு பதமுக்தியென்று சொல்வர்.


சாலோகம் - ஈசனவன் கூட்டத்தில் அவ்வுலகில் வாழ்வது

சாமீபம் - ஈசன் சமீபத்தில் அவன் ஆடும்பாதமடி புனிதவதியார் போல்வாழும் பேறு

சாரூபம் - ஈசனின் வடிவே தாமுமெய்தி வாழ்வது

சாயுச்சியம் - ஈசனே தன்னுள் கலந்து தான் அவனாகிவிட்ட அத்துவித நிலை.

சாரூபம் வரை பேறுபெற்ற உயிர்கள் மீண்டும் இறங்கிவருவது சொல்லக்கேட்கிறோம். இரண்டறக் கலந்துவிடல் பரமுக்தி. அவ்வளவுதான்.
முக்திக்கேற்ப பிரிபவை மார்க்கங்கள் என்பர். அவை முறையே:


தாசமார்க்கம் - என் கடன் பணிசெய்து கிடத்தலே என்றிருத்தல்.

சத்புத்ரமார்க்கம் - ஆணை நமதே என்று வேல் தூக்கும் உரிமை!கவனிக்க:அவ்வழி பிறந்தோரெல்லாம் சத்புத்திரரே;'ஒன்லி பிகாட்டன் சன்' அல்லர். ;-)

சகமார்க்கம் - இது நம்ம ஆளு என்ற பாவனையிது. வன்றொண்டர் வழி.

ஞானமார்க்கம் - தாளே தலையாகி தாடலை என்று பிரிக்கவியலாதசொல்லானது போல்இரண்டறக் கலந்த நிலையிது. எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தது போதும்என்றுமுடிந்தமுடிவாய் மூட்டை கட்டிக் கொண்டு காத்திருப்பவர் இவர்.
சைவக் குரவர் நால்வரையும் மேற்சொன்ன மார்க்கரீதியிலானஅணுகுமுறையில் அடக்குவதென்பது, அதுவும் என்போல்மலப்புழுவிலும் கேடானாவன் சொல்வது மிகமிகத்தவறு. அவர்கள் யாவும் கடந்த பேருயிர்கள். எனினும், பண்டு தொட்டு வரும் ஒருபுரிதலுக்காகச் சுட்டுகிறேன். அதுவும்அவர்களே தாம் பொழிந்த நிறைமொழிகளான மறைமொழிகளூடே குறிப்பால்உணர்த்துவதிலிருந்து:
என்கடன் பணிசெய்து கிடப்பதே என்றும், புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாஉன்னடி என் மனத்தே வழுவாதிருக்க வரம்தர வேண்டும் என்பதும் அப்பர்பெருமானதுவிண்ணப்பம். அது தாசமார்க்கத்தின் உன்னதத்தைச் சுட்ட வந்தது. சரியை என்றும்சொல்வர். இது சாலோக முக்தி.


'வேதவேள்வியை நிந்தனை செய்துழல்' கூட்டம் கண்டு பொங்கிய திருமகனார்பாலறாவாயரான எம்பெருமான் சம்பந்தர் சத்புத்திரமார்க்கம் சுட்டுபவர்.கிரியை என்றும் சொல்வர். உலகியல் சுழற்சி பாதிக்கும் வகையில்அசுரசக்திகள் மிகும்போதெல்லாம் வேலெடுத்து இரங்கிவரும், இறங்கிவரும் குழந்தையது. இதுசாமீப்ய முக்தி.குழந்தை தகப்பனுக்கென்றும் அண்மையில் அல்லவா இருக்கும்!


'இவரலாது இல்லையோ பிரானார்? அட போய்யா' என்று ஈசனையே ஸ்நேகித்த, அவரையே காதலியிடம் தூதனுப்பிய சுந்தரர் சுட்டுவது யோகமார்க்கமெனும் சகமார்க்கம். இது சாரூபம். ஆலாலசுந்தரர் என்று ஆடியில் தோன்றிய ஈசனின் வடிவே அவர்.


மாணிக்கவாசகர் ஞானமார்க்கம். அதுவே சன்மார்க்கம். எல்லாப் பிறப்பும்பிறந்திளைத்து, 'மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடுற்றேன்' என்றுமுடிந்தமுடிபாய் மூட்டை கட்டி விட்ட மணியது. 'தெருப்பாடல் உவந்தெனையும்சிவமாக்கும் தெய்வம்' என்று சன்மார்க்கவழியே கரைந்துபோய் விட்டவள்ளலாரையும் சுட்டலாம். சீவன் குறுகிச் சிவமாகும் இந்த மற்றீண்டுவாரா இறுதி நிலையே சாயுச்சியமாகும் பரமுக்தியாகும்.


சாயுச் சியஞ்சாக் கிராதீதஞ் சாருதல்சாயுச் சியமுப சாந்தத்துத் தங்குதற்சாயுச் சியஞ்சிவ மாதல் முடிவிலாச்சாயுச் சியமனத் தானந்த சத்தியே!திருமந்திரம் - 1513
(Sayujya is the state of Jagra-Atita, theBeyond-consciousness;Sayujya is to abide for ever in Upasantha, the peacethat passes all understanding;Sayujya is to become Siva himself;Sayujya is to experience the infinite power of inwardbliss,Forever and ever!)




இனி பதிகம் எழுந்த தருணத்தைக் காண்போம்....


அப்பர்பெருமான் பிறந்தது இன்று தென்னார்க்காடு என்று வழங்கப்படும் நடுநாட்டில்.இங்கே திருமுனைப்பாடியில் திருவாமூர் எனும் சிவத்தலத்தில் குறுக்கையர்(கார்காத்தவேளாளர் என்றும் சொல்வர்) குடியில், புகழனார்க்கும் மாதினியார்க்கும்இரண்டாவது மகவாய்ப் பிறந்தவர்க்கு, முன்னூறு ஆண்டுகளாய்த் தமிழகத்தைச் சூழ்ந்த மருள்எல்லாம்போக்கி அருள்பரப்ப வந்த அருளாளருக்கு 'மருள்நீக்கியார்' என்ற திருநாமம் அமைந்ததும் பொருத்தமே. இவருக்கு மூத்தவர் அன்புருவான திலகவதியார்.


மகிழ்வாய்ச் சென்று கொண்டிருந்த அந்த இனிய இல்லறத்தில் இறைவன் அவன் மறக்கருணையால் சோகம் சூழும் நேரமும் வந்தது. திடீரென்று தந்தையார் புகழனார் காலமானார். அவர் பிரிவைத்தாங்கவியலாத தாய் மாதினியாரும் உடன் விண்ணுலம் எய்தினார். அனாதரவாய் நின்றஅத்தருணத்தில்மேலும் ஒரு துயரச் செய்தி கிடைத்தது. திலகவதியாருக்கு மணம் முடிப்பதென நிச்சயித்திருந்த கலிப்பகையார் என்ற இளைஞரும் போரில் வீரமரணம்அடைந்துவிட்டார் என்ற தகவல் அவர்களை இடிபோல் வந்து தாக்க, துவண்டு வீழ்ந்ததிலகவதியார் 'பெற்றோர் இறந்தனர், கணவன் என்று நிச்சயித்த காதலனும் மாண்டான்; இனிநானும்உயிர்துறப்பேன்' என்று துக்கத்தின் உச்சியில் தீ மூட்டி தம்மை மாய்த்துக்கொள்ளப் போகும் நேரத்தில் பாலகரான மருள்நீக்கியார் தடுக்கிறார்.
'என் அருமை அக்கா! தாயும் தந்தையும் மாண்டபின் நான் உன்னையே அவர்வடிவில்கண்டு உயிர் வாழ்ந்துள்ளேன். நீயும் மாள்வாயெனில் நானும் உடன் வருவேன்.சற்றே பொறு.உனக்கு முன்னே நான் தீயில் புகுவேன்.' என்று தடுத்து நின்ற தம்பியைக் கண்டுஅன்புமிக மருள்நீக்கியார் வாழவேண்டித் தம் முடிவை மாற்றிக் கொண்டு உயிர்தரிக்கிறார் திலகவதியார். எனினும் இல்வாழ்வைத் துறந்து துறவறம் மேற்கொள்கிறார்.


தமக்கையாரின் கோலத்தைக் கண்டு வெதும்பிய மருள்நீக்கியார் சின்னாளில்தாமும் உலகவாழ்வை வெறுத்து, துறவின்றி வீடில்லை என்று உலகியலை முற்றாய் ஒதுக்கும் திகம்பரசமணர்களுடன் சேர்ந்து அவர்தம் வழிச்செல்கிறார். சமணர்தம்நூலெல்லாம் தேர்ந்து அச்சமய அறிஞராய்த் திகழ்ந்து 'தருமசேனர்' என்ற புதுப்பெயரும்பெற்றுவிட்டார் என்ற தகவல், திருவதிகை (இன்று பண்ருட்டி என்ற பெயர்)எனும் வீரட்டானத் தலத்தில் மடமொன்றை அமைத்துக் கொண்டு தவவாழ்வு வாழ்ந்துவரும் திலகவதியாரை எட்டுகிறது. தாங்கொணாத் துயரில் ஆலயம் சென்றுஅதிகை அம்மானிடம் முறையிட்டு அழுகிறார் அவர்.


'இதற்காகவா நான் தம்பியார் உளராக வேண்டும் என்று உயிர்கொண்டுவாழ்ந்தது? உலகியலோடு முரண்படா சைவம் விடுத்துத் தம்பியார் 'உளது இலது' என்றுகுழப்பவாதம் பரப்பிவரும் சமணருடன் சேர்ந்துழலவா நான் அவரைப் பேணி வளர்த்தது?' என்றுஅழுது நின்றதிலகவதியார் செவியில் அசரீரியாய் அருட்குரல் கேட்கிறது.

'வருத்தம் தவிர்ப்பாய் திலகவதி! மருள்நீக்கி எம் அடியான். அவனை அவன்விதிவழியேபோக விட்டோம். இனி தடுத்தாட்கொள்வோம். சூலைநோய் சூழ விரைவில்அவன்உன்னிடமே திரும்புவான்!' என்ற அருள்வாக்கில் ஆறுதல் அடைந்துகாத்திருக்கிறார்திலகவதியார்.


தொலைவில் பாடலிபுத்திர அமணர் பள்ளியில் படுத்திருந்த தருமசேனர்,வயிற்றில் புகுந்த வலிபொறுக்காமல் துடித்தெழுகிறார். குடரோடு துடக்கி முடக்கியிடும்சூலைநோயதுதிடுமென அவரைச் சூழக்கண்டு திகைத்து நிற்கின்றனர் சமணர் எல்லாம்.மயிற்பீலிகொண்டு தடவியும், குண்டிகை நீர் மந்திரித்துத் தெளித்தும், குடிக்கச் செய்தும்யாதொருபயனும் இல்லாமல் மேலும் வலிமிகக் கண்டு மெல்ல அகன்று செல்கின்றனர்.


'ஆ! ஆ! நாம் என்செய்கோம்! என்றழிந்த மனத்தினராய்ப் போவார்கள் இது நம்மாற் போக்கரிதாம் எனப்புகன்று' என்று பாடுகிறார் சேக்கிழார்பெருமான்.
தனியே துடித்திருந்த தருமசேனருக்கு அன்புருவான தம் தமக்கையார் ஞாபகம்வருகிறது. 'நான் இப்படித் துடிக்கவும் பொறுப்பரோ என் தமக்கையார்! அக்கா உன்னை உடன் காண வேண்டும் வா!' என்று செய்தி சொல்லிஅனுப்புகிறார் மருள்நீக்கியார்.


'ஆடை களைந்து அம்மணராய் வாழும் அப்பள்ளிக்கு நான் வரமாட்டேன். தம்பியைஇங்கே வரச்சொல்' என்ற தமக்கையார் சொல்லியனுப்ப உடன் பாயுடையும்,குண்டிகையும்,மயிற்பீலியுமாய் கொண்ட சமணர் கோலத்தை ஒழித்து வெள்ளுடை தரித்துஅந்த இரவிலேயே திருவதிகை மடத்தைச் சென்றைடகிறார் மருள்நீக்கியார். தமக்கையாரைச் சென்று பணிகிறார். அவர்நிலை கண்டு உருகிய திலகவதியார், 'கற்றை வேணியர் அருளே காணும் இது. கழலடைந்தோர் பற்றறுப்பார்தமைப்பணிந்துபணி செய்வீர்!' எனப் பணித்தார். அஞ்செழுத்தோதி திருநீறு பூசுகிறார்.


நோய் சற்றே தணிய விடியும் வேளை அருமைத்தம்பியை ஆலயத்துக்கு அழைத்துச்செல்கிறார். சேக்கிழார் பெருமான் பாடக் கேட்போம்:


திரைக்கெடில வீரட்டா னத்திருந்த செங்கனக வரைச்சிலையார் பெருங்கோயில் தொழுதுவலங் கொண்டிறைஞ்சித்தரைத்தலத்தின் மிசைவீழ்ந்து தம்பிரான் திருவருளால்உரைத்த தமிழ்மாலைகள் சாத்தும் உணர்வுபெற உணர்ந்துரைப்பார்.

நீற்றால் நிறைவாகிய மேனியுடன் நிறை அன்புறு சிந்தையில் நேசமிகமாற்றார்புரம் மாற்றிய வேதியரை மருளும் பிணி மாயை அறுத்திடுவான்' கூற்றாயினவாறு விலக்ககிலீர்' என நீடிய கோதில் திருப்பதிகம் போற்றாலுகேழின் வருந்துயரும் போமாறெதிர் நின்று புகன்றனரால்

மன்னும் பதிகம் அது பாடிய பின் வயிறுற்றடு சூலை மறப்பிணிதான் அந்நின்ற நிலைக்கண் அகன்றிடலும் அடியேன் உயிரோடருள் தந்ததெனாச்செந்நின்ற பரம்பொருளானவர்தம் திருவாரருள் பெற்ற சிறப்புடையோர் முன்னின்ற தெருட்சி மருட்சியினால் முதல்வன் கருணைக்கடல் மூழ்கினரே.


சூலைநோய் தீர்த்த முதல்வன் கருணைக்கடலில் மூழ்கிய மருள்நீக்கியாரும், திலகவதியாரும் கேட்கும் வண்ணம் வானின்று அசரீரியாய் தெய்வவாக்கொன்றும் எழுந்ததங்கே:

'செந்தமிழின் சொல்வளப் பதிகம் பாடிய பான்மையினால் நாவுக்கரசென்றுஉலகேழினும் நின் நன்னாமம் நயப்புற மன்னுக!'


இறையனார் ஆட்கொண்டு மருள்நீக்கியார் திருநாவுக்கரசர் ஆன சரிதம் இது.

தமக்கையார் சொற்படி எம் கடன் இனி பணி செய்து கிடப்பதே என்றுஇறைப்பணி செய்யத் தொடங்கினார் திருநாவுக்கரசர். பல நூற்றாண்டு இருள்தனை அகற்றவந்த பதிகமிதைப் பாடவேண்டிய தருணமிது:


கூற்றாயின வாறுவி லக்ககிலீர்கொடுமைபல செய்தன நானறியேன்ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்பிரியாது வணங்குவன் எப்பொழுதும்தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிடஆற்றேன் அடியேன்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மானே. 1


நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன்வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிடநஞ்சாகி வந்தென்னை நலிவதனைநணுகாமல் துரந்து கரந்துமிடீர்அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 2


பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர் படுவெண்டலை யிற்பலி கொண்டுழல்வீர்துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் பெற்றமேற்றுகந் தீர்சுற்றும் வெண்டலைகொண்டணிந்தீரடி கேள்அதி கைக்கெடிலவீரட்டா னத்துறை அம்மனே. 3

முன்னம்மடி யேன்அறி யாமையினான் முனிந்தென்னை நலிந்து முடக்கியிடப்பின்னையடி யேனுமக் காளும்பட்டேன்சுடுகின்றது சூலை தவிர்த்தருளீர்தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கட னாவதுதான்அன்னநடை யார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 4

காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற் கரைநின்றவர் கண்டுகொ ளென்றுசொல்லிநீத்தாய கயம்புக நூக்கியிட நிலைக்கொள்ளும் வழித்துறை யொன்றறியேன்வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிடஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 5

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை பாடல் மறந்தறியேன்நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உன்னாமம் என்னாவின் மறந்தறியேன்உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் உடலுள் ளுறுசூலை தவிர்த்தருளாய்அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 6


உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும் ஒருவர்தலை காவலி லாமையினல்வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்தருளீர்பயந்தேயென் வயிற்றின கம்படியே பறித்துப்புரட் டியறுத் தீர்த்திடநான்அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னாத்துறை அம்மானே. 7


வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன் வஞ்சம்மன மொன்று மிலாமையினாற்சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் சங்கவெண்குழைக் காதுடை எம்பெருமான் கலித்தேயென் வயிற்றி னகம்படியே கலக்கி மலக்கிட்டுக் கவர்ந்துதின்னஅலுத்தேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 8

பொன்போல மிளிர்வதொர் மேனியினீர் புரிபுன்சடை யீர்மெலி யும்பிறையீர்துன்பேகவ லைபிணி யென்றிவற்றை நணுகாமற் றுரந்து கரந்துமிடீர்என்போலிக ளும்மை இனித்தெளியார் அடியார்படு வதிது வேயாகில்அன்பேஅமை யும்மதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 9

போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல் புறங்காடரங் காநட மாடவல்லாய்ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் அடர்த்திட்டருள் செய்த வதுகருதாய்வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் என்வேதனை யான விலக்கியிடாய்ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே. 10


This page is powered by Blogger. Isn't yours?